Arakalagam
ArakalagamNews

Truth. Tamil. People.

Cinema

டோரதி: உணர்ச்சிகளில் போதையூட்டும் வரலாற்று ஓர்மையற்ற படம்! - Magizhlan

A

Arakalagam

September 29, 2026Updated September 29, 20261 min read2 views
டோரதி: உணர்ச்சிகளில் போதையூட்டும் வரலாற்று ஓர்மையற்ற படம்! - Magizhlan

கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’ (Dorothy) சமூகத்தின் விளிம்பில் நிறுத்தப்பட்ட மனிதர்களின் வாழ்வையும், அவர்களைச் சுற்றி உருவாக்கப்பட்டிருக்கும் சமூகப் பார்வைகளையும் கேள்விக்குள்ளாக்க முயல்கிறது. குறிப்பாக, திருநங்கைகள் எதிர்கொள்ளும் அவமதிப்பு, புறக்கணிப்பு, வன்முறை ஆகியவற்றை அடையாளம் காணும் இயக்குனரின் முயற்சி பாராட்டத்தக்கது. அவர்களையும் மற்ற மனிதர்களைப் போலவே சமத்துவத்துடன் அணுக வேண்டும் என்ற அடிப்படை மனிதநேய நோக்கமும் நியாயமானதே. ஆனால், இங்குதான் ‘டோரதி’ திரைப்படம் குறித்த அடிப்படையான கேள்விகள் தொடங்குகின்றன.

ஓர் படைப்பு சமூக அவலத்தை அடையாளம் காண்பது மட்டுமே போதுமானதல்ல. அந்த அவலம் ஏன் உருவானது? அதன் வரலாற்று வேர்கள் என்ன? அதைத் தொடர்ந்து கடத்திக் கொண்டிருக்கும் சமூகப் பொருளாதார உறவுகள் எவை? என்பதையும் கலைப்படைப்பு விசாரிக்க வேண்டியிருக்கிறது; விசாரிக்க வேண்டும். ஆனால், ‘டோரதி’ இங்கு ஒரு முக்கியமான வாய்ப்பைத் தவறவிடுகிறது.

dorothy review
dorothy review

திருநங்கைகள் சமூகத்தில் ஏன் இவ்வளவு புறக்கணிக்கப்பட்டவர்களாகவும், இழிவுபடுத்தப்பட்டவர்களாகவும் நடத்தப்படுகிறார்கள் என்பதை அறிவியல் (உடல்) மற்றும் வரலாற்றுப் பார்வையில் (வாழ்வியல்) ஆராய்வதற்குப் பதிலாக, திரைப்படம் பெரும்பாலும் அவர்களைச் சுற்றி உருவாக்கப்பட்டிருக்கும் நம்பிக்கைகள், புனிதத்தன்மை, உணர்வுகள் ஆகியவற்றின் தளத்திலேயே நின்றுவிடுகிறது.

இதில் மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால், திருநங்கைகளை மனிதர்களாக மதிக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையுடன் சேர்த்து, அவர்களைச் சுற்றி வரலாற்றில் உருவாக்கப்பட்ட மூடநம்பிக்கைகளும் பிற்போக்கான மதிப்பீடுகளும் கூட கேள்விக்குள்ளாக்கப்படாமல் அதையே திரை நாயக பிம்பமாகக் கட்டமைக்கபட்டுள்ளது.

ஒரு சமூகத்தின் மீது நிகழ்த்தப்பட்ட ஒடுக்குமுறையை வெளிப்படுத்துவதற்காக, அந்தச் சமூகத்தைப் புனிதப்படுத்த வேண்டிய அவசியமில்லை. மாறாக, அவர்களைப் புனிதர்களாக அல்ல, முழுமையான மனிதர்களாகப் பார்ப்பதே உண்மையான சமத்துவப் பார்வை.

திருநங்கைகள் மீது சமூகத்தில் நிலவும் பாரபட்சங்கள் எவ்வாறு வரலாற்றில் கட்டமைக்கப்பட்டன? மதம், சாதி, குடும்ப அமைப்பு, பாலினம் குறித்த சமூகக் கருத்துகள், உழைப்பு மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளிலிருந்து அவர்களை விலக்குதல் போன்ற பல்வேறு காரணிகள் அவர்களின் வாழ்க்கையை எவ்வாறு வடிவமைத்தன?இத்தகைய கேள்விகளுக்குத் திரைப்படம் பதில் அளிக்கவே இல்லை.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் நிலையைப் புரிந்துகொள்ள வேண்டிய பார்வையாளர்களை, ‘திருநங்கைகள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?’ என்ற சமூக அறிவியல் ரீதியிலான கேள்விக்குப் பதிலாக, ‘திருநங்கைகள் புனிதமானவர்கள்’ என்ற உணர்வு நிலைக்குள் அழைத்துச் சென்றுள்ளார் இயக்குநர்.

இங்கே இசையும் காட்சியமைப்பும் முக்கியமான பாத்திரங்களாக பங்காற்றுகின்றன. புனிதம், கடவுள், நம்பிக்கை ஆகியவற்றை மையப்படுத்தும் காட்சிகளுடன் வலிமையான மனதை உருக்கும் இசை இணையும் போது, அந்த உணர்வுகள் வெறும் கதைச் சொல்லல் என்ற எல்லையைத் தாண்டி, தான் சொல்ல வந்த கதையைப் பார்வையாளரின் மனதில் ஒரு நியாயப்படுத்தப்பட்ட உண்மையாக நிலைபெறச் செய்கிறது. இதுவே டோரதியின் மிகப்பெரிய பலவீனம்.

மூடநம்பிக்கையை விமர்சிக்காமல், அதை அழகியல் அனுபவமாக மாற்றிவிடுகிறது. மேலும், திருநங்கைகளை எதிர்க்கும் அல்லது அவர்களை இழிவுபடுத்தும் பிற்போக்காளர்களுக்கு எதிராக எந்தவொரு அறிவியல் பூர்வமான விளக்கத்தையும் திரைப்படம் முன்வைக்கவில்லை. இதனால் எதிர் கருத்துகளுக்கு அறிவியல் ரீதியான பதிலை உருவாக்குவதற்குப் மாறாக, பார்வையாளர்களை உணர்வின் தளத்திலேயே நிறுத்துகிறது. (வெறும் வாயை மெல்லும் அதி தீவிர கும்பலுக்கு வாயில் அவல் போட்டால் என்னவாகும்)

image
image

கலைப் படைப்பின் கடமை சமூகத்தில் நிலவும் குறைபாடுகளை வெறுமனே காட்டுவது மட்டுமல்ல. அந்தக் குறைபாடுகள் எங்கிருந்து வந்தன என்பதைத் தேடுவதும்; கடந்த காலத்தின் தவறுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதும்; நிகழ்காலத்தை அறிவியல் பார்வையுடன் புரிந்துகொள்ள உதவுவதும் அதன் முக்கியமான சமூகப் பொறுப்புகளில் ஒன்றாகும்.

அந்த வகையில் பார்த்தால், ‘டோரதி’ பாதிக்கப்பட்டவர்களின் வலியை அடையாளம் காண்கிறது; ஆனால் அந்த வலியை உருவாக்கிய சமூக வரலாற்றைப் போதுமான அளவில் விசாரிக்கவில்லை.

மாறாக அது மேல்கட்டுமான பிற்போக்கு வர்க்க உறவுகளை பாதுகாக்க முயல்கிறது. ஆதலால் அவர்களைச் சுற்றி உருவாக்கப்பட்டிருக்கும் மூடநம்பிக்கைகளையும் புனிதப் பிம்பங்களையும் உடைக்கத் தவறுகிறார் கா.சு.

சமூகத்தில் நிலவும் அவலத்திற்கான காரணங்களை ஆராய்வதற்குப் பதிலாக, அந்த அவலத்தில் வாழும் பெரும்பான்மையான மனிதர்களையே குற்றவாளிகளாக நிறுத்தி, பாதிக்கப்பட்டவர்களைப் புனிதப் பிம்பங்களாக மாற்றிவிடுகிறது ‘டோரதி’.

image
image

திருநங்கைகளுக்கான உண்மையான சமத்துவம் என்பது அவர்களைப் புனிதர்களாக மாற்றுவதில் இல்லை; அவர்களையும் மற்ற மனிதர்களைப் போலவே வரலாறும், சமூக உறவுகளும், உரிமைகளும், முரண்பாடுகளும் கொண்ட முழுமையான மனிதர்களாகப் புரிந்துகொள்வதில்தான் இருக்கிறது.

தமிழ்ச் சமூகத்தை வெறும் ரசிக மனப்பான்மையிலேயே வைத்திருக்க முயலும் மற்றுமொரு சாதாரண இயக்குனர்தான் தான் என்பதை டோரதியின் பின்நவீனத்துவக் கதையாடல் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

மகிழ்நன் பா.ம

image
image

Comments (...)

You must be logged in to leave a comment.

Related News

Support Independent Journalism

Help Us Tell the Stories That Matter

Arakalagam is powered by readers like you. Your support keeps our journalism free, independent, and accessible to all.